×

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும்

உடுமலை, அக். 23:  உப்பாறு அணைக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமூர்த்தி அணையில் இருந்து செல்லும் பிஏபி பிரதான கால்வாயில், அரசூர் ஷட்டரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உப்பாறு அணை உள்ளது. உப்பாறு ஓடை பகுதியில் 25 தடுப்பணைகள், 12 குளங்கள் உள்ளன. இதன்மூலம் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் நேரடியாக 2 ஆயிரம் ஏக்கரும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடியில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் அர்ஜூனன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரசாமி, துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், நேர்மை மக்கள் இயக்க நிறுவனர் ரகுபதி, உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: அரசாணைப்படி உப்பாறு அணைக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். உப்பாறு ஓடை நீர்வழிப்பாதையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் பயன் கருதி கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். பழைய ஆயக்கட்டு திட்டத்தில் பயன்பெறும் வணிக பயன்பாட்டுக்கு கைமாறிய நிலங்களை நீக்கவும், உப்பாறு அணை பாசன பகுதியை அதில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : dam ,Upparu ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்