×

மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு

கோவை, அக்.23: கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 86,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. துணை தாசில்தார் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவானது. தாலுகா அலுவலகத்தை தொடர்ந்து கோவையில் உள்ள மேலும் சில அரசு அலுவலகங்களில் லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக டாடாபாத்தில் உள்ள உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம், கோவை மாநகராட்சி அலுவலகங்கள் மீது பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். கட்டிட வரைவு அனுமதி, விதிமுறை மீறல் கட்டிடங்கள், அனுமதி பெறாத மனைகள், கட்டிடங்கள் போன்றவற்றுக்கு புரோக்கர்கள் மூலமாக பெரும் தொகை லஞ்சமாக பெறப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்கும் உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை ‘டிராப்’ மூலமாக பிடிக்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கோவை மாநகராட்சியில் உள்ள மூத்த பொறியாளர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திட்ட குழுமம், கோவை மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு அலுவலக அதிகாரிகள் முறைகேடாக சில புரோக்கர்களை தங்களது அலுவலகத்திற்குள் பணி செய்ய அனுமதித்து இருப்பதாக தெரிகிறது.

இவர்கள் அரசு அலுவலர்கள் எனக் கூறி பொதுமக்களிடம் கட்டிட அனுமதிக்காக பணம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புரோக்கர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்ச வசூல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் வாரி குவிக்கும் அரசு அலுவலர்களை சிக்க வைக்க திட்டமிட்டு காத்திருக்கின்றனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Raid on Corporation ,Local Planning Board ,
× RELATED உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வு