×

மேட்டூர் ரோட்டை இருவழிச்சாலையாக்கும் விவகாரம் போராட்டத்துக்கு தயாராகும் வணிகர்கள், அரசியல் கட்சியினர்

ஈரோடு, அக். 23: ஈரோட்டில் மேட்டூர் சாலையை இருவழிச்சாலையாக மாற்றுவதில் அலட்சியம் காட்டி வரும் மாவட்ட காவல்துறையை கண்டித்து கடையடைப்பு, கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்த வணிகர்கள், அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். ஈரோட்டின் முக்கிய சாலையான மேட்டூர் சாலையில் முக்கிய வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மேட்டூர் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.

பெருந்துறை சாலை, பிரப் சாலை, ஈ.வி.என் சாலை உள்ளிட்ட சாலைகளில் இருந்து வரும் பஸ் ஸ்டாண்டு வரும் வாகனங்கள் மட்டுமே வர முடியும். பஸ் ஸ்டாண்டில் இருந்தும் சத்தி, பவானி உள்ளிட்ட சாலைகளில் இருந்து செல்ல வேண்டிய வாகனங்கள் நாச்சியப்பா வீதி வழியாக செல்கிறது. இதனால் நாச்சியப்பா சாலை கடுமையான நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. பொதுமக்கள் சாலையை கடக்கக்கூட முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் மேட்டூர் சாலை வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேட்டூர் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் சாலையின் ஒரு பகுதியை பேரிகார்டுகள் கொண்டு மூடப்பட்டு ஆம்புலன்ஸ் செல்வதற்கு மட்டுமே திறந்து விடப்படுகிறது.

இதனிடையே ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால், மேட்டூர் சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெரிய வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில், உள்ளதாக வியாபாரிகள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் சாலையை இருவழிச்சாலையாக மாற்றக்கோரி வணிகர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த வாரம் கலெக்டர் கதிரவன், எஸ்பி. தங்கதுரை மற்றும் அதிகாரிகள் இருவழிச்சாலையாக மாற்றுவது குறித்து ஆய்வு நடத்தினர். ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இருவழிச்சாலையாக மாற்றுவதற்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளதையடுத்து தொடர் போராட்டங்களுக்கு வணிகர்கள், அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி உள்ளனர். இது குறித்து கருங்கல்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது: மேட்டூர் சாலையை வழக்கம்போல இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அனைத்து வணிகர்கள் சங்கம், மேட்டூர் சாலை வணிகர்கள், நாச்சியப்பா வீதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடந்த 6 மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். பல முறை இது தொடர்பாக மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட காவல்துறை தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமல் உள்ளது.

மாவட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கையால் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது. மேட்டூர் சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாடகை கூட செலுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் வணிகர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமல் அடம்பிடித்து வரும் மாவட்ட காவல்துறையை கண்டித்து கடையடைப்பு மற்றும் கருப்புகொடியேற்றும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அனைத்து வணிகர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். போராட்டம் தொடர்பாக வருகின்ற 2ம் தேதி ஈரோட்டில் நடக்க உள்ள அனைத்து வணிகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

Tags : road ,Mettur ,parties ,traders ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது