×

மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

தர்மபுரி, அக்.22: பென்னாகரம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவிகள், தங்களது அசல் சான்றுகளுடன், கல்லூரிக்கு நேரடியாக வந்து பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூதாட்டி தீக்குளிப்பு : ஏ.பள்ளிபட்டி தோழனூரைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அலமேலு(65). கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு, குணா உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து, அவரது மகனும் இறந்து விட்டார். அடுத்தடுத்து கணவன், மகன் இறந்ததால், அலமேலுவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, அலமேலு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ  வைத்து கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: பாலக்கோடு அண்ணாமலைஅள்ளி பகுதி பேருந்து நிறுத்தத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி விட்டு, டிரைவர் ஓடி விட்டார். டிராக்டரை போலீசார் சோதனையிட்டதில், ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு: காரிமங்கலம் அருகே குட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மைத்துனரின் மகனான முரளி(14). சற்று மனநலம் குன்றியவர். இவரை, தனது வீட்டில் தங்க வைத்து, பேகாரஅள்ளி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்க வைத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை முரளியை காணாததால் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள கிணற்றில் முரளி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு: அரூர் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் முன்பு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார்,  வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.

சிஐடியூ ஆர்ப்பாட்டம்: தர்மபுரி மாவட்ட சிஐடியூ சார்பில், அதகப்பாடி தனியார் கிரானைட் ஆலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, தொழிலாளர்கள் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்துக்கு ஆதரவாக, பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ மாநில செயலாளரும், மாவட்ட செயலாளருமான நாகராசன், மாநில குழு உறுப்பினர்கள் நாகராஜன், கலாவதி, மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், ரகுபதி, அங்கம்மாள் ஆகியோர் பேசினர். உண்ணாவிரதம்: இண்டூர் அதகப்பாடி அருகே தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணி வழங்கக்கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா