×

அரசியல் பிரமுகர்களுக்கு தகவல் அளிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்சென்றதால் பரபரப்பு

திங்கள்சந்தை, அக்.22: திங்கள்சந்தையில் குடோனில் இருந்து, அரசியல் பிரமுகர்களுக்கு தகவல் அளிக்காமல் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்சென்றதில் மர்மம் இருப்பதாக கூறி காங்கிரஸ் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடக்கிறது. தமிழக  சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடக்க உள்ளது. இதற்காக  ஓட்டுபதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு  வருகின்றனர். குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் பாராளுமன்ற  தொகுதிக்கான ஓட்டுபதிவு இயந்திரங்கள், திங்கள்சந்தையில் உள்ள அரசு ஒழுங்கு  முறை வேளாண்மை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. சுமார்  13675 இயந்திரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஓட்டுபதிவு  இயந்திரங்கள் சரியாக உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில்  அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் திடீரென  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஓட்டு பதிவு இயந்திரங்கள் கண்டெய்னர் லாரியில்  வெளியூர் எடுத்து செல்லப்பட்டன. இது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.  அப்போது பழுதடைந்த மற்றும் குளறுபடியான ஓட்டு பதிவு இயந்திரங்களை சரி செய்ய  பெங்களூரில் உள்ள நிறுவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அரசியல்  கட்சியினரை ஆய்வு நடத்திய போது அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் பழுடைந்த  இயந்திரங்கள் சரிசெய்ய அனுப்பும் போது ஏன் அழைக்க வில்லை என்று புகார்  கூறினர். இதுகுறித்து பிரின்ஸ் எம்எல்ஏ கூறுகையில்: திங்கள்சந்தை  ஒழுங்கு முறை வேளாண்மை விற்பனை கூடத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக  ஓட்டு பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது அரசியல்  கட்சியினர் இடையே சந்ேதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இது வன்மையாக  கண்டிக்கதக்கது. இதற்கு அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் வரும் திங்கள்கிழமை திங்கள்சந்தை ஒழுங்கு முறை வேளாண் அலுவலக  முன் மறியல் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றார். அதிகாரிகளின்  நடவடிக்கைக்கு திமுக மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜோசப்ராஜூம்  கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த  தகவல் அறிந்ததும் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் மற்றும்  திமுகவினர் கிட்டங்கி முன்பு நேற்று திரண்டனர். திமுக சிறுபான்மை  பிரிவு நிர்வாகி ஜோசப்ராஜ், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் லிவிங்ஸ்டன், குருந்தன்கோடு   ஒன்றிய செயலாளர் ஜெபராஜ், உள்ளிட்டோர் குடோன் சென்று  அதிகாரிகளிடம்  கேட்டனர்.

அப்போது அதிகாரிகள் தரப்பில் சரியான  பதில் அளிக்கவில்ைல. இதனால் எம்எல்ஏ தலைமையில் அவர்கள் குடோனை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இரணியல் போலீஸ்  இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். பின்னர்  அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது  அவர்கள், இங்கிருந்த எத்தனை ஓட்டு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டன?  எதற்காக கொண்டு சென்றனர்? என கேட்டனர். அதற்கு  பதிலளித்த அதிகாரிகள், இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரியிடம் கேட்டு பதில்  அளிக்கிறோம் என பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து  கலைந்து சென்றனர்.

பின்னர் இது குறித்து ராஜேஷ்குமார்  எம்எல்ஏ  கூறுகையில், குடோனில் பாதுகாப்பாக வைத்திருந்த மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்களை இரவோடு இரவாக எடுத்து சென்றது கண்டிக்கத்தக்கது. இயந்திரங்களை  இங்கு கொண்டு வந்து வைக்கும்போது அனைத்து கட்சியினரை அழைத்தனர்.  ஆனால்இங்கிருந்து எடுத்து செல்லும்போது ஏன் அனைத்து கட்சிகளையும்  அழைக்கவில்லை. ஓட்டு பெட்டிகளை பெங்களூர் பெல்  நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் எந்தபட்டனை  அழுத்தினாலும் பாஜவினருக்கு ஆதரவாக வாக்கு பதிவாகும் படி செட்டிங்  செய்வதற்காக எடுத்து சென்றுள்ளதாக சந்தேகிக்கிறோம். இதை மறைப்பதற்காக தான்  ரகசியமாக எடுத்து சென்றுள்ளனர்.எனவே இங்கிருந்து கொண்டு சென்ற மின்னணு  இயந்திரங்களை இனிமேல் இங்கு கொண்டுவரக்கூடாது. அதற்கு பதிலாக புதிய  இயந்திரங்கள் கொண்டு வரவேண்டும். அதை அனைத்து கட்சியினரையும் அழைத்து ஆய்வு  செய்த பின்னரே இங்கு வைக்க வேண்டும். அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் திங்கள்சந்தையில்  நடத்தப்படும். நாளை(இன்று) குடோன் முன் மறியல்  போராட்டம் நடத்தப்படும் என  தெரிவித்தார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு