×

ஊரடங்கால் முடங்கிய தசரா வியாபாரம் தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி

ஆரல்வாய்மொழி, அக்.22: கொரோனா கட்டுப்பாடுகளால் தசரா வியாபாரம் சூடுபிடிக்காததால் தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் நஷ்டமடைந்துள்ளனர். தோவாளை  பூ மார்க்கெட்டுக்கு உள் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில்  இருந்து பல வகையான வண்ண, வாசனை பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக  வருகின்றன. குறிப்பாக மல்லி, பிச்சி, அரளி, கேந்தி  போன்ற பூக்கள் அண்டை மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வருகின்றன. இதனால்  ஏராளமான உள்ளூர், கேரள வியாபாரிகள் வருகின்றனர். ஓணப்பண்டிகை,  முகூர்த்த தினங்கள், அனைத்து பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகமாக  இருக்கும். விலையும் அதிகமாகவே இருக்கும். விலையேற்றத்தின் மூலம்  கிடைக்கும் லாபத்தை வைத்து ஆண்டு முழுவதும் சாதாரண நாட்களில் ஏற்படும்  இழப்புகள், இயற்கை சீற்றத்தால் ஏற்படும்  இழப்புகளை வியாபாரிகள்  ஈடுசெய்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில்  ஓணம் பண்டிகை வந்ததால் பூ வியாபாரம் நடக்கவில்லை. தசரா பண்டிகை அதை ஈடுகட்டும் என பூ  வியாபாரிகளும், விவசாயிகளும் நம்பி இருந்தனர். இந்த நிலையில்  தற்போது ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் தசரா  குழுக்களுக்கு அனுமதி அளிக்காததால் பூ விற்பனை நடைபெறவில்லை. இதனால் இந்த  ஆண்டு நவராத்திரி காலத்தில் பூக்களின் விலை மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த  ஆண்டு ₹ 1000 என விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ தற்போது ₹ 250க்கு  விற்கிறது. பிச்சி கடந்த ஆண்டு ₹1000, நேற்று ₹ 300, சம்பங்கி கடந்த  ஆண்டு ₹ 350, நேற்று ₹ 200, கனகாம்பரம் ₹ 2000, நேற்று ₹ 750,  மஞ்சள்கேந்தி ₹ 150, நேற்று ₹ 40, ஆரஞ்ச் கேந்தி ₹ 150, நேற்று ₹ 50 என  விற்பனையானது.

 இதேபோல் நேற்று முல்லை ₹ 300, வாடாமல்லி ₹ 70, பாக்கெட்  ரோஸ் ₹ 30, பட்டன்ரோஸ் ₹ 120, பன்னீர்ரோஸ் ₹ 100, வெள்ளைசெவ்வந்தி  ₹ 250, மஞ்சள் செவ்வந்தி ₹ 100, தோவாளை அரளி ₹ 100,  சேலம் அரளி ₹ 200,  ெகாழுந்து ₹ 100, மரிக்கொழுந்து ₹ 120 என விற்பனையானது. விலை குறைவாக  இருந்தாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பூ  விவசாயிகளும், வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Towala ,
× RELATED தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர்...