திப்புராயபேட்டையில் ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் பயங்கர கோஷ்டி மோதல் 20 அடி உயரத்திலிருந்து விழுந்தவர் சாவு

புதுச்சேரி, அக். 22: புதுச்சேரி திப்புராயபேட்டையில் கருமாதி நிகழ்ச்சியில் நடைபெற்ற இடத்தில் ரவுடி கும்பல் இருகோஷ்டியாக ஆயுதங்களுடன் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். இதில் 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். கத்திவெட்டில் படுகாயமடைந்த பெயிண்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் அப்பகுதியில் இருந்த 10 பைக்குகள் சூறையாடப்பட்டன.

 புதுச்சேரி, திப்புராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவுடி தெப்ழான். திருந்தி வாழ முற்பட்ட இவரை கடந்த 7ம்தேதி அவனது மாஜி கூட்டாளிகள் வீராம்பட்டினத்தில் அடித்துக் கொலை செய்தனர். இதுதொடர்பாக பிரபல ரவுடி பாம் ரவி உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 நேற்று முன்தினம் இரவு தெப்ழானின் 16ம்  நாள் கருமாதி நிகழ்வுக்காக அவரது உறவினர்கள், நண்பர்கள்,  திப்புராயப்பேட்டை, சமுதாய நலக்கூடம் அருகே திரண்டிருந்தனர். அதுசமயம் அந்த  வழியாக சென்ற தெப்ழானின் எதிரியான வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த  பார்த்திபனை, அங்கிருந்த தெப்ழானின் நண்பரான திப்புராயபேட்டை, லசார் கோயில்  வீதியில் வசிக்கும் பெயிண்டரான சரவணன் (27), குமரகுருபள்ளம், ராசாத்தி  கோயில் வீதியைச் சேர்ந்த விமல்ராஜ் (28) உள்ளிட்ட 4 பேர் தகராறு  செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காயங்களுடன் வீடு  திரும்பிய பார்த்திபன், ஊரில் உள்ள தனது கூட்டாளிகளிடம் நடந்த சம்பவத்தை  கூறி பதிலடி கொடுக்கும் வகையில் கத்தி, உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை  உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பலாக திப்புராயபேட், சமுதாய நலக்கூடத்துக்கு  வந்தார்.

 பின்னர் அங்கிருந்த சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை  பார்த்திபன் தலைமையிலான கும்பல் ஓடஓட விரட்டி சரமாரி தாக்கியது. இதில்  சரவணனுக்கு காலில் கத்திவெட்டுக் காயம் விழுந்த நிலையில் உறவினர் வீட்டில்  தஞ்சமடைந்து உயிர்தப்பினார். இருப்பினும் ஆத்திரம் தனியாத அக்கும்பல்  அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி கீழே  தள்ளி சேதப்படுத்தியதோடு துணிகரமாக கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த  தாக்குதலின்போது சரவணனுடன் நின்றிருந்த விமல்ராஜ், எதிரிகளிடமிருந்து  தப்பிக்க சமுதாய நலக் கூடத்தை ஒட்டியுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான  குடோனின் சிமெண்ட் ரூப் ெஷட் மீது ஏறி ஓடியுள்ளார்.

அப்போது சிமெண்ட் சீட்  உடைந்து 20 அடி உயர குடோனுக்குள் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில்  படுகாயமடைந்த அவர் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனிடையே ரவுடி கும்பல் மோதலில் ஈடுபட்ட தகவல் கிடைக்கவே ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், எஸ்ஐ பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தாக்குதலில் ஈடுபட்ட வம்பாகீரப்பாளையம் கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது. பின்னர் படுகாயமடைந்த சரவணனை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்தவர்களில் சிலர், குடோன் சிமெண்ட் ரூப் ஷீட் மீது ஏறி ஓடி  தப்பிக்க முயன்ற ஒருவரை காணவில்லை என போலீசாரிடம் கூறிய நிலையில், குடோனை  திறந்து போலீசார் உள்ளே சென்றனர். அப்போது அங்கு உயிருக்கு போராடிய  விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில்  அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே விமல்ராஜ் இறந்து விட்டதாக  கூறிவிட்டனர்.

 இதையடுத்து சிகிச்சையில் இருந்த சரவணனிடம் புகாரை பெற்ற  ஒதியஞ்சாலை போலீசார், வம்பாகீரப்பாளையம் பார்த்திபன், மணிமாறன், ஹரி, மதி, விக்கி, சாந்தகுமார் ஆகியோர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். இதில் சாந்தகுமார் உள்ளிட்ட 3 பேர் தனிப்படை வசம் சிக்கியதாக தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பார்த்திபன் மீது அடிதடி உள்ளிட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

 மேலும் விமல்ராஜ் இறப்பு தொடர்பாக, அவரது மாமா பன்னீர்செல்வத்திடம் புகாரை பெற்ற போலீசார், சந்தேக மரணம் பிரிவின்கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்திபன் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தியதில் தலையில் அடிபட்டு அவர் இறந்தாரா அல்லது சிமெண்ட் ரூப் ஷீட் உடைந்து கீழே விழுந்ததில் விமல்ராஜ் மரணமடைந்தாரா? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது சாவுக்கான முழு காரணம் தெரியவரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இச்சம்பவம் திப்புராயபேட்டையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Related Stories: