×

வீதி முழுவதும் காய்கறி கடைகளால் வெறிச்சோடிய உழவர்சந்தை மூடப்படும் அபாயம்

காரைக்குடி, அக்.22: உழவர்சந்தையில் கடைகள் இல்லாததால் மூடப்படும் அபாயம் உள்ளது. காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டு அருகே உழவர்சந்தை செயல்படுகிறது. 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சிறு, குறு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் கொண்டு வந்து இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யலாம். விவசாயிகளின் பொருட்களுக்கு வெளிமார்க்கெட் மொத்த விலையில் இருந்து 20 சதவீதம் அதிகமாகவும், உள்ளூர் விலையில் இருந்து 15 சதவீதம் குறைவாக தினமும் விலை நிர்ணயம் செய்து ஒவ்வொரு கடையின் முன்பு விலை எழுதி தொங்கவிடப்பட்டு இருக்கும்.

இந்த விலை அடிப்படையில் தான் விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளும் நியாயமான லாபம் கிடைக்கும். பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் வாங்கலாம். திமுக ஆட்சியில் இந்த உழவர்சந்தைக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கடைகள் குறைந்து. தற்போது மிகக் குறைந்த அளவிலேயே கடைகள் செயல்படுகின்றன. இங்கு கடை போட்ட விவசாயிகள் தற்போது தெருக்களின் ஓரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைபோட்டு விற்பனை செய்து வருகின்றனர். கடைகள் இல்லாத நிலையில் உழவர்சந்தையை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், உழவர்சந்தைகளில் சரியான விலையில் காய்கறிகள் வாங்கமுடிந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் வெளியேறி பல்வேறு இடங்களில் கடைபோட்டு வெளிமார்க்கெட் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆங்காங்கே வீதிகளில் கடைபோட்டுள்ள விவசாயிகளை மீண்டும் உழவர்சந்தையில் கடைபோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : street ,vegetable stalls ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...