×

பெரியாறு கால்வாய் தண்ணீர் முழுமையாக பெற்றுத்தரப்படும் அமைச்சர் பாஸ்கரன் உறுதி

சிவகங்கை, அக்.22: சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக்கால்வாய் விவசாயிகளுக்கு முழுமையான அளவு தண்ணீர் பெற்றுத்தரப்படும் என அமைச்சர் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பெரியாறு பாசனக்கால்வாய் விவசாயிகளுக்கான நீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு பெரியாறு பாசனக்கால்வாயில் தற்போது தண்ணீர் வரும் நிலையில் தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கேற்ப பங்கீட்டு முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட முழு அளவு தண்ணீரை 5 கால்வாய்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும்.

விவசாயிகள் அவ்வப்போது தெரிவிக்கும் புகாரை கருத்திற்கொண்டு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஒதுக்கீட்டிற்குறிய நாட்களுக்கு உரிய அளவு தண்ணீரை கொண்டு வர வேண்டும். நடப்பாண்டிற்கு தற்போது பாசனக்கால்வாயில் தண்ணீர் வந்தாலும் கொள்ளளவு குறைவதால் கண்மாய்கள் நிரம்புவதில் காலதாமதம் ஆகின்றன. தண்ணீர் குறையாமல் வழங்கிட பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் திட்டமிட்டு பணி மேற்கொள் வேண்டும்.

விவசாயிகள் ஆலோசனைப்படி பொதுப்பணித் துறையின் மற்ற பிரிவுகளிலுள்ள உதவிப்பொறியாளர்களை இரண்டுமாதத்திற்கு பாசனக்கால்வாய்க்கு பணி மேற்கொள்ள செயற்பொறியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் மாவட்டத்திற்கு வரும் நீர் சரியான அளவு சரியான காலங்களில் வரும். அதற்கான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் செயற்பொறியாளர் பவளக்கண்ணன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சருகனியாறு கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார், விவசாய சங்க அமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Baskaran ,Periyar ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...