சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கக்கோரி வழக்கு பணி ஒதுக்கீடு பட்டியல் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தீர்ப்பாயம் உத்தரவு

மதுரை, அக். 22: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாற்றுத்திறனாளி பெண் தனக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கக் கோரிய வழக்கில், பணி ஒதுக்கீடு தொடர்பான பட்டியல் இறுதி உத்தரவுக் கட்டுப்பட்டது என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, மணி நகரத்தைச் சேர்ந்த பூரணசுந்தரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் தாக்கல் செய்த மனு: பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான நான், யுபிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றேன். நான், ஓபிசி பிரிவில் 286வது இடம் பெற்றேன். இதைத்தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 713 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், எனக்கு ஐஆர்எஸ் (வருமான வரித்துறை) பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவருக்கு ஐஏஎஸ் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால், என்னைப் ேபான்ற மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது. ஐஎப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஏஎஸ் ஆகிய பிரிவுகளில் கடந்த 2018 முதல் இந்த முறை பின்பற்றப்படுகிறது. ஆனால், சிவில் சர்வீஸ் பணி நியமனங்களில் 4 சதவீத ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு பிரிவிலும் விதிப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் வழங்க வேண்டும். இதன்படி, ஐஏஎஸ் பிரிவிற்கு 1 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவருக்கு மட்டுமே பணி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கவும், எனக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதித்துறை உறுப்பினர் டெர்டால், நிர்வாக உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் வக்கீல்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆஜராகி, ‘‘ஐஏஎஸ் பணி 180 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் 2 பேருக்கு பணி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒருவருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் மனுதாரரை  விட குறைந்த மதிப்பெண் பெற்று 304வது இடம் பெற்றவருக்கு ஐஏஎஸ் பணி ெகாடுக்கப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் மனுதாரர் ஐஏஎஸ் பணி ஒதுக்க தகுதி பெற்றுள்ளார்’’ என்றார். இதையடுத்து மனுவிற்கு மத்திய பணியாளர் நலன் அமைச்சக செயலர் மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அடுத்தாண்டு ஜன.22க்கு தள்ளி வைத்தனர். மேலும், சிவில் சர்வீஸ் பணி ஒதுக்கீடு தொடர்பான பட்டியல் இந்த வழக்கின் இறுதி உத்தரவிற்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: