சேமநலநிதியை கருவூலத்தில் செலுத்தாத பிரச்னை மாநகராட்சி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை, அக்.22: மதுரை மாநகராட்சியில் பழைய 72வார்டுகளுடன் புதிதாக 28வார்டுகளை இணைத்து மொத்தம் 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. அப்போது விளாங்குடி, ஹார்விப்பட்டி, திருநகர், ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இவற்றில் சுமார் 350 நிரந்தர தூய்மைப்பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த சிறப்பு சேமநலநிதி மற்றும் குடும்பநல நிதி சுமார் ரூ.3கோடியை மாவட்ட கருவூலக்கணக்கு அலுவலகத்தில் வைப்புத்தொகை செய்யப்படவில்லை. இதனால் தூய்மைப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர வாரிசு வேலைக்கு விண்ணப்பித்த தூய்மை பணியாளர்களின் வாரிசுக்கே வேலை வழங்க வேண்டும். மாநகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்து, நிர்வாகம் மூலம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மைய அலுவலகம் முன்பு  தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தூய்மைப் பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் முருகையா முன்னிலை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: