519 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கல் கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும்

திருச்சி, அக்.22: பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 519 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி வரவேற்றார். திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆணைகளை வழங்கி பேசியதாவது: கல்வி ஒன்றுதான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும். கல்வி கற்றால் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். மாநிலத்தில் கல்வித்துறைக்கு ரூ.34,109 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உயர்கல்விக்கு மட்டும் ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்த அரசு உறுதுணையாக உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனியார் பள்ளிக்கான அங்கீகாரம் தற்போது 2 ஆண்டுகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. வருங்காலங்களில் 3 ஆண்டுகள் அல்லது நிந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இன்டர்நெட் கல்வி செயல்படுத்தப்படுகிறது. மாணவர் கல்வி திறனை மேம்படுத்த கல்வித்துறை மூலம் தனி தொலைக்காட்சி சேனல் ஆரம்பித்து, அதன் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இந்தியாவில் தமிழகம்தான் கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மணப்பாறை சந்திரசேகர், மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்ஜோதி, முன்னாள் எம்பி ரத்தினவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>