×

திருமண நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்து 3 ஆண்டாக காத்திருக்கும் பயனாளிகள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பிறகே கிடைப்பதாக குற்றச்சாட்டு

வலங்கைமான், அக்.22: தமிழகஅரசு சமுகநலத்துறையின் மூலம் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திருமண நிதி உதவிதிட்டங்களுக்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளாக காத்திருப்பதாக பயனாளிகள் குற்றசாட்டியுள்ளனர். மேலும் காலதாமதமின்றி உடனே வழங்கிட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் சமுக நலத்துறை கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பெண்களை முன்னேற்றிட செயல்பட்டு வருகிறது. மேலும் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய சமூக உரிமை பெற்றிடவும் செயல்பட்டு வருகிறது.

மகளிர் மேம்பாட்டிற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவிதிட்டம், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதிஉதவி திட்டம், அன்னை தெராசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் என 5 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்கள் மூலம் 10ம் வகுப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகின்றது. அதேபோல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு படித்தவர்களுக்கு ரூபாய் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான பயனாளிகளிடமிருந்து கல்வி மாற்று சான்று நகல், வருமானச் சான்று, திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சமூக நலத்துறையின் மூலம் உரிய சான்றுகளுடன் பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பயளாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அதற்கான தொகை மற்றும் தங்கம் ஆகியவை பெண்ணின் பெற்றோர்களிடம் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அரசால் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இத்திருமண திட்டங்களில் பயன்பெறுவதற்கு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு அதற்கான உதவித்தொகை மற்றும் தங்கம் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாவே திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான தொகையினை திருமணமான பெண்கள் கைக்குழந்தையுடனே வந்து பெறும் நிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குழந்தை பிறந்து குழந்தையை பள்ளியில் சேர்த்த பிறகே உதவித் தொகை கிடைக்கும் நிலை உள்ளது.

முன்னதாக பெண்ணின் பெற்றோர்கள் மகளின் திருமணத்திற்கு அரசின் உதவித்தொகையை நம்பி கடன்பெற்ற நிலையில் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் கூட உதவித்தொகை வழங்காததால் முன்னதாக கடன் பெற்றவர்களுக்கு வட்டி கூட செழுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். இதே நிலை தமிழகம் முழுவதும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயனாளிகளின் நலன் கருதி மேலும் காலதாமதம் செய்யாமல் திருமண உதவித்தொகைகளை உடனே வழங்க வேண்டும் என பயனாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Marriage Financial Assistance Scheme ,children ,school ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...