×

கொரோனா ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க புதுகைக்கு இன்று முதல்வர் வருகை

புதுக்கோட்டை, அக். 22: தமிழக முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கியும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அந்த வகையில் முதல்வர் பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இன்று (22ம் தேதி) வருகை தரவுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 8.30 மணிக்கு திருச்சி வரும் அவர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் விராலிமலை செல்கிறார். அங்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் இனாம்குளத்தூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள உலோக சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதனையடுத்து, இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே 100 அடி கொடுக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றுகிறார். அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் காவிரி-குண்டாறு திட்டத்தை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய் அருகே விவசாயிகள் சார்பில் நூற்றுக்கணக்கான மாட்டுவண்டிகளில் பயிர்கள் வேளாண் விளை பொருட்கள் வேளாண் கருவிகளோடு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தொழில் முனைவோர், சுயஉதவிக் குழுவிரை சந்திக்க உள்ளார். விழா முடிந்து மாலை 5 மணிக்கு முதல்வர் திருச்சி விமான நிலையம் வந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி கலெக்டர் அலுவலகம் புனரமைப்பு கூடுதலாக மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கலெக்டர் அலுவலகம் வருவோர் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல்வர் வருகையையொட்டி திருச்சி, புதுக்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,corona review meeting ,
× RELATED இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்...