×

ஆட்டோக்களில் சமூக இடைவெளி பின்பற்றாததால் கொரோனா தொற்று பரவும் அபாயம்

திருப்பூர், அக்.22: திருப்பூரில் பல ஆட்டோக்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஊரடங்கில் அறிவித்த பல்வேறு தளர்வுகளால், திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் 100 சதவீதம் இயங்குகின்றன. கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்படுகின்றன. இதனால், பொது போக்குவரத்து பயன்படுத்துவோர் அதிகளவில் வெளியே வரத்து துவங்கி உள்ளனர். வெளியூர் பஸ்கள் தவிர டவுன் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழியும் பயணிகளுடன் செல்கின்றன. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் முண்டியடித்தபடி பஸ்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில், போதுமான பஸ் போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில், மருத்துவமனை, வேலைக்கு, மார்க்கெட் செல்வதற்கு மக்கள் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர்.

ஆட்டோவில், குறைந்தளவே பயணிகளை ஏற்ற வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்தும், அதையும் மீறி சில ஆட்டோக்களில் சமூக இடைவெளியின்றி அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 170-ஐ தாண்டிவிட்டது. இருப்பினும், மக்களிடையே கொரோனா தொற்று குறித்த பயம் சிறிதும் இல்லாமல் இருந்து வருவது அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, சமூக இடைவெளியை பின்பற்றாத, ஆட்டோக்களை கண்காணித்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி