×

ஆயுதபூஜை நெருங்குவதால் வாழைத்தார் விலையேற்றம்

பொள்ளாச்சி,அக்.22: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தாலும், சரஸ்வதிபூஜை,ஆயுத பூஜை நெருங்குவதால் கூடுதல் விலைக்கு ஏலம்போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் ஏலத்தில், சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி, திருச்சி, கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகிறது. அதனை,  உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து, குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்கின்றனர்.

அண்மையில் தென்மேற்கு பருவமழையின் போது வாழை அறுவடை பணி சற்று பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த மாதம் துவக்கத்திலிருந்து சில வாரமாக மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. பின் இந்த மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கத்தால், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து அதிகமானது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி சென்றனர். வரும்25ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 26ம் தேதி  விஜயதசமி என்பதால், இந்த வாரத்தில் நேற்று நடந்த ஏலத்தின் போது, பெரும்பாலான வாழைத்தார்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தே கொண்டு வரப்பட்டது. இருப்பினும்,அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாழைத்தார் ரூ.800 முதல் அதிகபட்சமாக ரூ.1350 வரையிலும் ஏலம்போனது. மோரீஸ் அதிக பட்சமாக ரூ.700க்கும், பூவன்தார் ரூ.800 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.700க்கும், ரஸ்தாளி 650 வரையிலும் கேரள ரஷ்தாளி ஒரு கிலோ ரூ.45க்கும்  என, கூடுதல் விலைக்கு ஏலம் போனது. அடுத்து சரஸ்வதி பூஜைக்கு முந்திய நாள், சிறப்பு ஏலம் நடைபெறும் என  வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மஞ்சள் விலை வீழ்ச்சியை தடுக்க இ-டெண்டர் முறை