பொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது

பொள்ளாச்சி,அக்.22: பொள்ளாச்சி கோட்டத்தில், தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில்  கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, பல்வேறு சுகாதார பணியில், சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர்  ஈடுபட்டனர். இருப்பினும், ஜூலை மாதம் முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.  அதிலும், கடந்த சில மாதமாக  தினமும் 10  முதல் 15 வரையிலானோர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்து 7 மாதங்களை கடந்தும், இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை என்று தெரியவருகிறது. பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் நேற்று முன்தினம் வரையிலும் கொரோனா தொற்றால் மொத்தம் 1007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 960 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் இதுவரை 32 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால், நகர் மற்றும் கிராமபுறங்களில்   தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: