பவானி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது சரக்கு வேன் பறிமுதல்

ஈரோடு, அக். 22: ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளான அத்தாணி, கீழ்வாணி,  கூத்தம்பூண்டி, ஆப்பக்கூடல், ஓரிச்சேரி, தளவாய்பேட்டை போன்ற பகுதிகளில்  அதிகளவில் ஆற்று மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கும், வருவாய்  துறையினருக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், தளவாய்ப்பேட்டை  ஓரிச்சேரி பகுதியில் ஓடும் பவானி ஆற்றின் கரையோரம் மணல் கடத்தி செல்வதாக  ஆப்பக்கூடல் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து,  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை  செய்தபோது, அனுமதியின்றி பவானி ஆற்று மணல் 1 யூனிட்டை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேன் டிரைவரிடம் நடத்திய  விசாரணையில், அவர் பவானி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன்  மகன் மதன்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதன்குமாரை  கைது செய்து, சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: