×

கதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்: மாமல்லபுரம் சுற்று வட்டார கிராம மக்கள் வேதனை

மாமல்லபுரம்: கதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாயிகள், விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கின்றனர். இதனால், மாமல்லபுரம் சுற்று வட்டார கிரம வேதனையடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க, முழுக்க விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். மழை பொய்த்து ஏரிகள் வறண்டாலும் கிணறு, ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் விவசாய பணிகளை ஆண்டுதோறும் தொடர்ந்து செய்கின்றனர். இதையொட்டி, மாமல்லபுரம் அடுத்த எச்சூர், குழிப்பாந்தண்டலம், நந்திமா நகர், காரணை, நல்லான்பிள்ளை பெற்றாள், கடம்பாடி, எடையூர், வடகடம்பாடி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் நெற்பயிர், வேர்க்கடலை, கேழ்வரகு, எள், உளுந்து, கரும்பு, தர்பூசணி சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

ஆனால், மாவட்டத்தில் பல கிராமங்களில் கதிர் அடிக்கும் களம் இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். சில கிராம பகுதிகளில் களம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவை முறையாக பராமரிக்காததால், சிதிலமடைந்து மோசமான நிலையில் கிடக்கிறது. இதனால் எள், உளுந்து, கேழ்வரகு உள்பட பல்வேறு பயிர்களை கதிர் அடிக்க களம் இல்லாமல் விவசாயிகள், சாலைகளிலேயே கொட்டி உலர வைக்கும் களமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எச்சூர், குழிப்பாந்தண்டலம், நந்திமாநகர் உள்ளிட்ட பல இடங்களில் நெல், கேழ்வரகு உள்பட பயிறு வகைகளை சாலைகளில் கொட்டி உலர வைக்கும் காட்சியை ஆண்டு தோறும் பார்க்க முடிகிறது.

மேலும், சாலைகளை கதிரடிக்கும் களமாக பயன்படுத்துவதால் இருசக்கர வாகனம், கார் மற்றும் கனரக வாகன விபத்து அடிக்கடி நடக்கிறது.
அதில், விவசாயிகள் உள்பட பலரும் படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன.எனவே, தமிழக அரசு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக களம் வசதி இல்லாத கிராமங்களில் கதிர் அடிக்கும் களம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : road ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...