×

கன்னியாகுமரி அருகே துணிகரம் மளிகை கடையை உடைத்து கொள்ளை

கன்னியாகுமரி, அக்.21: கன்னியாகுமரி அருகே இடையன்விளையில் மளிகை கடையை உடைத்து ₹ 57 ஆயிரம் பணம், ₹ 12 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல்(45). கடந்த 6 வருடமாக கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் இடையன்விளை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது திருமணம், புதுமனை புகும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்துகிறவர்கள் இவரது கடையில் மொத்தமாக மளிகை பொருட்கள் வாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இந்த பகுதியில் நடக்கும் 2 நிகழ்ச்சிகளுக்காக மளிகை பொருள் வாங்க 2 பேர் ₹ 57 ஆயிரம் கொடுத்திருந்தனர். அந்த பணத்தை அவர் கடையில் வைத்து விட்டு இரவு சுமார் 10.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை  கடையை திறக்க வந்தார். அப்போது கடை ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ₹ 57 ஆயிரம் பணம் மற்றும் ₹ 12 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை காணவில்லை.  இது குறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.  போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர்.  கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடந்தது.  அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடந்து வருகின்றன. இதுவரையில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

Tags : grocery store ,Kanyakumari ,
× RELATED மளிகை கடையில் கொள்ளை