×

குமரி காவல்துறை சார்பில் ஏற்பாடு பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ் அப் ஹெல்ப் லைன்

நாகர்கோவில், அக்.21: குமரி மாவட்ட காவல்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாட்ஸ் அப் ஹெல்ப்லைன் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி ெகாள்ளுமாறு எஸ்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யும் வகையில் குமரி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய ஹெல்ப்லைன் சேவையை எஸ்.பி. பத்ரிநாராயணன் நேற்று தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் திருட்டு, போதை பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதத்தில் 20 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
வழக்கமான குற்றவாளிகள், சந்தேக  நபர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என 590  குற்றவாளிகள் மீது நன்னடத்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  242 பேரிடம்  நன்னடத்தை பிணை எழுதி வாங்கப்பட்டது. இவ்வாறு நன்னடத்தை சான்றிதழ் எழுதி  கொடுத்தவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஒரு வருடம் வரை ஜாமீனில் வர  முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்கள். ஏற்கனவே வடசேரியில் இது  போன்று நன்னடத்தை சான்றிதழ் எழுதி கொடுத்து விட்டு, குற்ற நடவடிக்கையில்  ஈடுபட்ட லோடுமேன் சேகர் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டு  இருக்கிறார். கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் தற்போது போலீசார்  தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 3 மாதங்களில் 31 கஞ்சா  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 64  கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் கைதாகிறவர்கள்  20  முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர்.

கடந்த 3  மாதத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டதாக 93 பேர் மீது 42 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு ரேஷன்  அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். கடந்த 3  மாதங்களில் இதுவரை 32 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, உணவு  கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 17 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொது மக்களுடைய குறைகளை வேகமாக தீர்க்கும் வகையில் தற்போது புதிய வாட்ஸ் அப் ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த ஹெல்ப்லைன் இயங்கும். இதற்கு பொது மக்கள் புகார்களை போட்டோக்களாகவோ அல்லது சிறு வீடியோ மூலமாகவோ அனுப்பலாம். தயவு செய்து யாரும் இதற்கு போன் செய்ய வேண்டாம். போன் செய்தால் தொடர்பு கிடைக்காது. எனவே தகவல்களை மட்டும் அனுப்புங்கள். தகவல் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள், விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது. சிறு பிரச்னைகள் என்றாலும் கூட பொதுமக்கள் இந்த ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவிக்கலாம். இதன் நம்பர் 70103 63173 ஆகும். குறிப்பாக பெண்கள் தங்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக தெரிவிக்கலாம். பொதுமக்களிடம் இதன் பயன்பாடுகளை பொறுத்து இந்த சேவை நவீனப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஏடிஎஸ்பி ஈஸ்வரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சைபர் கிரைம் போலீஸ் விசாரணை எஸ்பி பத்ரி நாராயணன் மேலும் கூறுகையில் குமரி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி இ-மெயில் உருவாக்கி மிரட்டல் விடுத்தவர் தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் கிரைம் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை தற்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதால் மேற்கொண்டு விவரங்களை தெரிவிக்க முடியாது. நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். பின்னர் இது தொடர்பான விவரங்களை தெரிவிப்போம் என்றார்.

Tags : Kumari Police ,
× RELATED நிவர் புயல் எதிரொலி; மின்சாரம்...