×

திருமணம் செய்வதாக கூறி கடலூர் பெண் அதிகாரியிடம் நகை, பணம் பறித்தவர் கைது

செஞ்சி, அக். 21:  செஞ்சி அருகே திருமணம் செய்வதாக கூறி பெண் அதிகாரியிடம் நகை, பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராமப்புற மேம்பாட்டு அலுவலராக பணியாற்றுபவர் நிர்மலா(43). இவர் திருமண தகவல் மையத்தில் வரன் வேண்டி பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த செஞ்சி வட்டம் அணையேரி கிராமத்தை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் தேவசகாயம் (45) என்பவர் நிர்மலாவை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் இருவரும் திருமணம் செய்யாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஜோசப் தனது சகோதரி வர்கீஸ் வீடான மட்டப்பாறை கிராமத்திற்கு நிர்மலாவை அழைத்து சென்றுள்ளார். அப்போது வர்கீஸ் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றேன் என கூறியுள்ளார். பின்னர் தாலி செய்ய 6 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை நிர்மலாவிடம் பெற்றார்.  

இந்நிலையில் நிர்மலாவை திருமணம் செய்ய மறுத்த ஜோசப்  நீ என்னிடம் நெருக்கமாக இருக்கும் படத்தை நெட்டில் வெளியிடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதுகுறித்து நிர்மலா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜோசப்புக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றதும், இவரும், இவரின் சகோதரி வர்கீஸ், உறவினர் ஜெசிந்தாள் ஆகியோர் சதி திட்டம் தீட்டி நிர்மலாவிடம் பணம், நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோசப்பை போலீசார் கைது செய்தனர். வர்கீஸ், ஜெசிந்தாளை தேடி வருகின்றனர்.

Tags : Cuddalore ,jewelery ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!