×

தமிழக முதல்வர் தொகுதியில் செம்மண் கொள்ளை தினசரி 500 லோடு கடத்தலால் பல கோடி இழப்பு

இடைப்பாடி, அக்.21: தமிழக முதல்வர் தொகுதியான இடைப்பாடியில் செம்மண் கொள்ளை அதிகரித்துள்ள நிலையில், தினசரி 500 லோடு அளவுக்கு கடத்தப்படுவதால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேரில் ஆய்வு செய்த செல்வகணபதி குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் உள்ள பக்கநாடு ஊராட்சிக்குட்பட்ட செங்குட்டப்பட்டி, ஆணைபள்ளம், கல்லுரல் காடு, கரட்டூர், ஆடுவாப்பட்டி, மேட்டு தெரு, ஆடுவாப்பட்டி நீர்வழிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு மற்றும் தனியார் விவசாய நிலங்களில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. இதனால், மண் திட்டுக்களாக காணப்பட்ட இடங்கள் அனைத்தும் தரை மட்டமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் சுமார் 60 அடி வரையிலும் பொக்லைன் கொண்டு செங்கல் சூளைகளுக்காக மண் தோண்டி எடுத்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கடத்திச்செல்வது வாடிக்கையாக உள்ளது.

ஆளுங்கட்சியினர் ஆதரவுடன் மண் வெட்டி கடத்தப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி நேற்று நேரில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். பக்கநாடு பகுதியில் 25க்கும் மேற்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, சுமார் 60 அடிக்கு மண் சுரண்டி எடுக்கப்பட்ட நிலையில் ஒருசில இடங்கிளல் மரங்களுடன் கூடிய திட்டுக்கள் மட்டுமே எஞ்சியிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 50 அடி முதல் 60 அடி வரையிலும் மண் தோண்டி எடுத்துள்ளனர். ஒரு சில இடங்களில் வேர்விட்டு வளர்ந்த மரங்களை அப்புறப்படுத்த வழியின்றி அந்த இடத்தை மட்டும் விட்டுள்ளனர். மேலும், சில பகுதிகளில் மின்கம்பம் உள்ள இடத்தையும் விட்டு வைத்துள்ளனர். சுற்றிலும் மண்ணை சுரண்டி எடுத்த நிலையில், உரிய பிடிமானம் இன்றி மின்கம்பம் சாய்ந்தவாறு காணப்படுகிறது. தமிழக முதல்வரின் சொந்த தொகுதியில் இடைப்பாடியில் ஆளுங்கட்சியினரின் துணையோடு மண் கடத்தல் அதிகரித்துள்ளது.  குறிப்பாக பக்கநாடு ஊராட்சியில் அரசு நிலங்கள், தனியார் நிலங்கள் என 200 ஏக்கரில் செங்கல் சூளைக்கு செம்மண் எடுத்துள்ளனர். தினமும் 500 நடைக்கு மேல் டிராக்டர், டிப்பர் லாரிகளில் செம்மண் கொள்ளையடிக்கப்படுகிறது.

குத்தகைதாரர்கள் என்ற பெயரில் போலியான பர்மிட் வைத்து இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு மணல் அள்ளிச் செல்லப்படுகிறது. புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர், ஆளுங்கட்சியினர் துணையோடு, கனிம வளத்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அடிமாட்டு விலைக்கு செம்மண் அள்ளிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது. மண் எடுத்துச்செல்லும் வாகனங்களால் பக்கநாடு பஞ்சாயத்தில் சாலைகள் சிதிலமடைந்து வருகிறது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. செம்மண் கொள்ளையால் அரசுக்கு பல கோடி இறப்பு ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாகவே ஆளுங்கட்சியினர் செம்மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர் . எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,constituency ,smuggling ,
× RELATED பிறந்தநாள் வாழ்த்து கூறிய...