சேலம் அருகே மின் கட்டணத்தில் குளறுபடி புகார் மனுவை வீசி எறிந்து தரக்குறைவாக திட்டிய அதிகாரி

ஜலகண்டாபுரம், அக்.21: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கரிக்காப்பட்டி குட்டிக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(55). விவசாயியான இவர், தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களில் வந்த சராசரி மின் கட்டணம் அதிகபட்சமாக 110 ரூபாய் வரை இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு கடந்த ஜூலை மாதம் தான் கணக்கீடு எடுக்கப்பட்டுள்ளது. அதில், வழக்கமான தொகையை விட பல மடங்கு அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டு ₹2786 செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காட்டம்பட்டியில் செயல்பட்டு வரும் புறநகர் பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற பாலசுப்ரமணியம், அங்கிருந்த மின் பொறியாளர் காளியப்பனிடம் முறையிட்டுள்ளார். மேலும், புகார் மனுவும் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட காளியப்பன் மின் மீட்டரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கும்.

அதனை ஓரிரு நாட்களில் சரி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், அதுவரை மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கணக்கீடு செய்ய வந்த மின் கணக்கீட்டாளர் மீட்டர் செயல்படவில்லை என அட்டையில் எழுதிவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து அலுவலகம் சென்று கேட்டபோது மின் மீட்டர் செயல்படாத நிலையில் 2786 ரூபாயுடன் மேலும் 530 ரூபாய் சேர்த்து 3316 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நேற்று மின் பொறியாளர் காளியப்பனிடம் மீண்டும் பாலசுப்ரமணியன் மனு அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காளியப்பன் மனுவை தூக்கி எறிந்ததுடன், முழு கட்டணத்தையும் செலுத்துமாறு கூறி தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான பாலசுரமணியம் மின் கட்டணத்தை செலுத்தாமல் மனவேதனையுடன் வீடு திரும்பியுள்ளார்.

மேலும், மின் கட்டணம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்தி தன்னை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>