×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலி தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, அக்.21: கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் முதல் பிரதான மதகு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி உடைந்ததால், புதிய மதகு பொருத்தப்பட்டது. அதன் பின்னர் ₹19 கோடி மதிப்பில் மற்ற 7 மதகுகளும் புதியதாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அணையில் 32 அடிக்கு கீழ் தான் தண்ணீர் தேக்கி வந்தனர். புதிய மதகு பொருத்தப்பட்டதால், அணையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தண்ணீர் தேக்கி வந்தனர். பாசனத்திற்கு மட்டும் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி நேற்று மாலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடக பகுதி மற்றும் ஓசூர், சூளகிரி பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த உயரமான 52 அடியில் 48 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 1666.29 மில்லியன் கனஅடியில் தற்போது, 1238.06 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அணையில் நீர்மட்டம் 50 அடியை விரைவில் எட்டும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருவாய் துறை மற்றம் பொதுப்பணித்துறையினர் கரையோரங்களில் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.  ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் (நீர்வள ஆதாரம்) சரவணகுமார், உதவி பொறியாளர் சையத்ஜஹ்ருதீன், தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Krishnagiri district ,
× RELATED சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது...