போலீஸ் பாதுகாப்புடன் புதிய பஸ் நிலையம் இன்று திறப்பு உதவி கலெக்டர் ஆய்வு பேரணாம்பட்டில் பஸ் நிலையம் அமைய எதிர்ப்பு

குடியாத்தம், அக். 21: பேரணாம்பட்டில் பஸ்நிலையம் அமைய பல்வேறு எதிர்ப்பு உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று புதிய பஸ்நிலையம் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி குடியாத்தம் உதவி கலெக்டர் அதிகாரிகளுடன் நேற்று பஸ்நிலையத்தை ஆய்வு செய்தார். பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோடு பகுதியில் காவல் நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில வருடங்களாக பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஆம்பூர் குடியாத்தம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்கிறது. இந்நிலையில், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்கர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பேரணாம்பட்டு காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் தலைமையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலையம் மீட்புக் குழு என கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் திடீரென புதிய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது பஸ்கள் செல்லும் வழி, பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வழி, பஸ் நிற்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.  மேலும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலர் சுதாகர், குடியாத்தம் டிஎஸ்பி சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர், புதிய பஸ் நிலையம் நாளை (இன்று) முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ் நிலையம் அமைய பல்வேறு எதிர்ப்பு இருப்பதால் டிஎஸ்பி சரவணன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் புதிய பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: