டி.கல்லுப்பட்டியில் 7 ஊர் கோயில் திருவிழா ஆலோசனை கூட்டம் அரசு விதிகளுக்கு உட்பட்டு நடத்த முடிவு

பேரையூர், அக். 21:  பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 7 ஊர் மக்கள் ஒன்று கூடும் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் இத்திருவிழா நடத்துவது குறித்து நேற்று டி.கல்லுப்பட்டி யூனியனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை வகிக்க, கலெக்டர் வினய், ஆர்டிஓ ராஜ்குமார், தாசில்தார் சாந்தி, டிஎஸ்பி மதியழகன் முன்னிலை வகித்தனர். இதில் டி.கல்லுப்பட்டி, வி.சத்திரப்பட்டி, வி.அம்மாபட்டி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், தேவன்குறிச்சி ஆகிய 7 ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு அமைச்சர், 6 ஊர்களிலிருந்து சப்பர பவனியுடன் திருவிழா நடத்தவும், அரசு விதிகளுக்குட்பட்டு கொரோனா சமூக பரவல் ஏற்படா வண்ணம் திருவிழாவை நடத்தவும், அதற்கான திட்டமிடலை அனைத்து துறைகள் சார்பில் குழு அமைத்து, பொதுமக்களுடன் இணைந்து பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என கேட்டு கொண்டார். முன்னதாக அமைச்சர், சூலப்புரத்தில் கொலை செய்யப்பட்ட செல்லத்துரை குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, பசுமைவீடு கட்டுவதற்காண ஆணையினை வழங்கினார்.

Related Stories: