×

ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

நத்தம், அக்.21: அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்று, தமிழ்நாடு கிராம, நகர்ப்புற ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. நத்தம் யூனியன் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம, நகர்ப்புற ஊழியர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். நத்தம் கிளை தலைவர் குருசாமி, செயலாளர் சின்னகருப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அரசு 7வது ஊதியக்குழுவை எங்களுக்கு வழங்க வேண்டும்.  அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். மேலும் தமிழக சட்டசபை விதி எண் 110ன் கீழ் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.2600ல் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 600ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆகவும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். 3 ஆண்டு பணி முடித்த துப்புரவு  பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் மேல்நிலை தண்ணீர் தொட்டி இயக்குபவர்கள் நத்தம் வட்டார அளவில் கலந்து கொண்டனர்.   

Tags :