×

பண்டிகை காலம் எதிரொலி

கருர், அக். 21: பண்டிகை காலஙகளில் வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள் மற்றும் உணவகங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழல் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் கருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால் வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழல் உள்ளதால் கொரோனோ தொற்று பரவும் நிலை அதிகம் உள்ளது.

எனவே வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், உணவகங்களின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் முகக்கவசம் கட்டாயம் அணிந்துள்ளனரா என்பதை கண்காணித்து முகக்கவசம் அணிந்த நபர்களை மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். கடைகளுக்கு வரும் அனைத்து நபர்களும் உள்ளே நுழையும் போது கைகளை சுத்தமாக கழுவிய பிறகே உள்ளே வரும் வகையில் தண்ணீர் மற்றும் சோப்பு வைக்க வேண்டும். அல்லது சானிடைசர் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் அனைத்து வாடிக்கையாளாக்ளுக்கும் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்க வேண்டும். உடல் வெப்பநிலை அதிகமாகவும், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓட்டல்கள் மற்றும் இனிப்பகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்துதான் பணியாற்ற வேண்டும். கடைகளுக்குள் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும். கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்க, அமர போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும்.

வாய்ப்புள்ள நிறுவனங்களில் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைவதற்கும், பொருட்களை வாங்கியபின் கடையை விட்டு வெளியில் செல்வதற்கும் இரு வழி ஏற்படுத்த வேண்டும். கடைகளையும், கழிவறைகளையும் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சமூக இடைவெளியுடள் நிறுத்துவதை போக்குவரத்து காவலர்கள் கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தொடர்ந்து இரவு பகல் பாராத முயற்சியால் கொரோனா தொற்று கரூர் மாவட்டத்தில் கட்டுக்குள் உள்ளது. பண்டிகை காலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் மீண்டும் தொற்று பரவல் அதிகமாகும் சூழல் உருவாகி விடும். எனவே பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், நிறுவனத்தின் நலன் கருதியும், சமூக நலன் கருதியும் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் சந்தியா மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா