சமூக விரோதிகளின் கூடாரமாகும் நெசவாளர் காலனி

திருப்பூர், அக் 21; திருப்பூர் நெசவாளர் காலனி பள்ளியின் பின்புறம் புதர்மண்டி கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. திருப்பூரின் மைய பகுதியில் நெசவாளர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடைகள், வணிக வளாகங்கள், பனியன் நிறுவனங்கள் வழிபாட்டு தளங்கள் ஆகியவை உள்ளன. இங்குள்ள அரசு பள்ளியின் பின்புறம் அதிகளவில் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். மேலும், இப்பகுதியில் கருவேலமரங்கள் அதிகம் வளர்ந்து புதர் போல காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இதனால், இங்கு சிலர் கஞ்சா அடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

இந்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் மது அருந்தி  விட்டு குடிபோதையில் அருகே உள்ள வீடுகளில் கதவை தட்டுகின்றனர். செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் இரவு நேரத்தில் மின் விளக்கும் இல்லை. அப்படியே மின் விளக்குகளை அமைத்தாலும் அதை உடைத்து விடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் இங்குள்ள பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருக்க வேண்டி உள்ளது. சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: