பூக்கள் விலை மீண்டும் அதிகரிப்பு

பொள்ளாச்சி, அக். 21: பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து மட்டுமின்றி மடத்துக்குளம், உடுமலை, கணியூர் நிலக்கோட்டை, கரூர், பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நாமக்கல், மதுரை, தேனி மற்றும் பல பகுதியிலிருந்து இருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரள மாநிலம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதில் கடந்த ஒரு மாதமாக, மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும், விஷேச நாட்கள் இல்லாமல் அனைத்து வகையான பூக்களின் விற்பனை மந்தமாகி மிகவும் குறைவான விலைக்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ மல்லிகை ரூ.200க்கு விற்பனையான நிலை ஏற்பட்டது. அதுபோல், ஜாதி மல்லி ரூ.180, முல்லை ரூ.200க்கும், செண்டுமல்லி ரூ.100க்கும், கோழிக்கொண்டை ரூ.80க்கும், மரிக்கொளுந்து ரூ.40க்கும் என குறைவான விலைக்கு விற்பனையானது.

 இந்நிலையில், ஐப்பசி மாதம் துவக்கம் இருப்பதுடன் அடுத்து வரும் நாட்களில் விஷேச நாட்கள் இருப்பதால், பூக்களின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பூக்களுக்கு கிராக்கி அதிகரிப்பால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.850க்கும், முல்லை 700க்கும், ஜாதிமுல்லை  ரூ.800க்கும், செண்டுமல்லி ரூ.200க்கும் என அனைத்து வகையான பூக்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. சரஸ்வதி பூஜை மற்றும் சுப முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த இருப்பதால் வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: