கொரோனா அபாயம் கடைவீதிகளில் கூட்டம் கூட வேண்டாம்

கோவை, அக். 21:  கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், பொதுமக்களிடம் கொரோனா குறித்து இருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தெரிகிறது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலர் மாஸ்க் அணியாமல் வெளியில் நடமாடுகின்றனர். மேலும், கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். கிருமி நாசினி, கை கழுவ எவ்வித வசதியும் இல்லாமல் காணப்படுகிறது. தவிர, ஏசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனாவின் தாக்கம்தான் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று போகவில்லை. இதனை உணர்ந்து பொதுமக்கள், வணிகர்கள் செயல்பட வேண்டும். அலட்சியம் ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரை நோயாளிகள், இதயம், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.

தவிர, பண்டிகை காலம் நெருங்கி வருவதால் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், கடை வீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, வணிகர்கள் அரசின் விதிமுறையை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்களும் மாஸ்க் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: