ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்

ஈரோடு,  அக். 21: ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி சில்லரை  விற்பனையும், மொத்த விற்பனையும் களைகட்ட துவங்கியுள்ளதால் வியாபாரிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் ஜவுளி சந்தை வாரந்தோறும்  திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை நடக்கும்.  இந்த சந்தையானது ஈரோட்டில் கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி,  திருவேங்கடசாமி வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில்  கூடும். தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி,  ஜவுளி சந்தை வியாபாரிகள் புதிய ஜவுளி ரகங்களை அதிகளவில் விற்பனைக்கு  குவித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் கூடிய சந்தையில் தீபாவளி  பண்டிகை விற்பனைக்காக மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை  வாங்கி சென்றனர். அதேசமயம் சில்லரை விற்பனையும் சூடுபிடித்தால்  வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தீபாவளி  பண்டிகையையொட்டி தினசரி சந்தையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சில்லரை  விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்று (நேற்று) கூடிய வார சந்தையில் தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா பார்டர்  பாலக்காடு போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை  கொள்முதல் செய்து சென்றனர்.

இதில் பெண்கள், குழந்தைகள்  கவுன், சுடிதார், சேலை, ஆண்களுக்கு தேவையான வேட்டி, சட்டை, பனியன்,  உள்ளாடைகள் போன்றவற்றை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்றனர். பெரும்பாலான வியாபாரிகள்  பாம்பே மற்றும் லூதியானா போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பேன்சி ரக  ஜவுளிகளை அதிகளவில் கொள்முதல் செய்தனர். இதனால், இந்த வாரம் கூடிய  சந்தையில் 70 சதவீதம் மொத்த விற்பனை நடந்துள்ளதால், ஜவுளி சந்தை வியாபாரிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரக்கூடிய வாரத்தில் மொத்த விற்பனையை விட  சில்லரை விற்பனை களைகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: