கடந்த 3 ஆண்டுகளில் தட்கல் திட்டத்தில் 1,100 புதிய மின் இணைப்புகள்

ஈரோடு, அக். 21: தட்கல் விரைவு மின் இணைப்பு திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 1,100 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் இலவச மின்சாரம் பெற சுயநிதி மின் இணைப்பு எனப்படும் தட்கல் விரைவு திட்டம், சாதாரண மின் திட்டம் என இரு முறைகளில் மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. சுயநிதி மின் இணைப்பு திட்டத்தில், ரூ.10,000 மதிப்பீட்டு செலவு பிரிவில் 2001ம் ஆண்டு வரையிலும், ரூ.25,000 மதிப்பீட்டு செலவு பிரிவில் 2008ம் ஆண்டு வரை விண்ணப்பித்தவர்களுக்கும், ரூ.50,000 மதிப்பீட்டு செலவு பிரிவில் 2010ம் ஆண்டு வரை விண்ணப்பித்தவர்களுக்கும் தற்போது மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் இணைப்பு வழங்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,100 மின் இணைப்புகள் இத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 625 பேர் இத்திட்டத்தில் மின் இணைப்புபெற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இதில் 565 பேர் பணம் செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: