கீழ்பவானி பாசன நிலங்களுக்கு முறைநீர் பாசனம் அமல்

ஈரோடு, அக். 20: கீழ் பவானி பாசன நிலங்களுக்கு முறை வைத்து நீர் திறக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்பு இணை செயலாளர் வெங்கடாசலபதி கூறியதாவது: பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கீழ்பவானி பாசன நிலங்களில், நன்செய் பயிருக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் முதல் வாரம் பாசன பகுதிகளில் மழை பெய்ததால், உழவு பணி நடந்தது. மூன்றாம் வாரம் அக்டோபர் முதல் வாரம் வரை நடவுப்பணி தீவிரமடைந்தது.

 ஆனால் தற்போது பாசன பகுதிகளில் மழை இன்றி, பிரதான வாய்க்காலில் கூடுதல் நீர் திறக்க முடியாததால், பிரதான வாய்க்காலின் கடைமடை பகுதியான 100 முதல் 124 மைல் வரையிலான சென்னசமுத்திரம், ஊஞ்சலூர், கவுந்தப்பாடி, பவானி, ஈரோடு, மேட்டுப்பாளையம், கூகலூர் பிரிவு வாய்க்காலின் கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீர் முழுமையாக செல்லாமல், நடவுப்பணி பாதித்துள்ளது.  இதனால், உழவு மற்றும் நடவுப்பணிகள் பாதிக்காமல், அனைத்து பகுதிக்கும் சீரான நீர் கிடைக்கும் வகையில் பொதுப்பணித்துறை பாசன சபையினருடன் பேசி, முறைநீர்ப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பவானி, சென்னசமுத்திரம், ஊஞ்சலுார் பிரிவு வாய்க்கால்களில் உள் முறையும் (கோபி, ஈரோடு உட்கோட்ட பிரிவு வாய்க்கால்), 0.0 மைல் தலைப்பு முதல், 74வது மைல் வரை 2 நாட்கள் நீர் நிறுத்தம் செய்து, 8 நாட்கள் முழு அளவு நீர் பாசனத்துக்கு திறந்து விடும் வகையில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  பாசன நீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் நிர்வாகம் செய்ய வேண்டும். நீர் நிறுத்தம், திறப்பு ஆகியவை மழை பெய்வதற்கு ஏற்ப மாறுபடும். எனவே, அந்தந்த பாசன சபையினர், பொதுப்பணித்துறையினரை தொடர்பு கொண்டு, நீர் நிறுத்தம், திறப்பு குறித்து கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: