மயான இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் திடீர் தர்ணா

ஈரோடு, அக். 20:  மயான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நம்பியூர் அடுத்துள்ள வெள்ளாளபாளையம், அம்பேத்கர் நகரில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தை மயானமாக மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். மொத்தம் 1.33 ஏக்கர் பரப்பளவில் உள்ள மயானத்தில் சுமார் 75 சென்ட் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த நபர் ஆக்கிரமித்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து வருவாய்த்துறையினரிடம் கிராம மக்கள் பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அக்கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்னுசாமி என்பவர் இறந்ததையடுத்து மயான ஆக்கிரமிப்பு அகற்றும் வரை சடலத்தை புதைக்க மாட்டோம் என்று கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறையினர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை அகற்றி சடலத்தை புதைக்க வழி வகை செய்து கொடுத்தனர். இந்நிலையில் இறந்த பொன்னுசாமிக்கு சடங்குகள் செய்வதற்காக உறவினர்கள் கடந்த 15ம் தேதி மயானத்திற்கு சென்றபோது பொன்னுசாமி புதைக்கப்பட்ட இடத்தில் இருந்த சடலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக வரப்பாளையம் போலீசில் பொன்னுசாமியின் உறவினர்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், அதிகாரிகளின் தொடர் அலட்சியப்போக்கினை கண்டித்து நேற்று அம்பேத்கர்நகர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்பி. ராஜூ மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உயர் அதிகாரிகள் நேரில் வந்து பதில் அளித்ததால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும், பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் ஆதார், ரேசன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கப்போவதாகவும் கூறினர். இதையடுத்து சமூக நலத்திட்ட தனித்துணை ஆட்சியர் இந்திரா, தாசில்தார் கவிதா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இச்சம்பவம் தொடர்பாக கோபி கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடுவதாக கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: