×

மனு கொடுக்க வந்த பெண் திடீர் தர்ணா

கோவை, அக். 20:  கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண், திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நியூசித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (40). இவர், நேற்று காலை தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து அமுதாவிடம் இங்கு தர்ணா போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட அமுதா, கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பெட்டியில் தனது கோரிக்கை மனுவை அளித்தார்.திடீர் தர்ணா குறித்து அமுதா கூறியதாவது:

எனது கணவரின் தாத்தா பெயரிலுள்ள பட்டா இடம் இதுவரை பாகப்பிரிவினை செய்யப்படவில்லை. இந்நிலையில் சிலர் எனது வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுகின்றனர். இதனால் எனது வீட்டிற்கு நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஐந்து அடி அகலம் உள்ள நடைபாதையை 1½ அடிக்கு மட்டுமே இடம்விட்டு வீடு கட்டுகின்றனர்.  இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தால் கோர்ட்டிற்கு செல்லும்படி தெரிவிக்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனது வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தை மறைத்து கட்டப்படும் கட்டிட பணியை தடுத்து நிறுத்தி, எனது வீட்டிற்கு செல்ல 5 அடி அளவிற்கு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்