×

ராமநத்தம் அருகே அடுத்தடுத்து துணிகரம் விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 109 பவுன் நகை, ₹7 லட்சம் கொள்ளை கழிவறை ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து அட்டூழியம்: எஸ்பி நேரில் விசாரணை

திட்டக்குடி, அக். 20:    ராமநத்தம் அருகே ஆலம்பாடி கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 109 பவுன் நகை மற்றும் 7 லட்சத்து 27 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி (63), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பக்க வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் பின்பக்கம் இருந்த கழிவறையின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் முன்பக்க கதவை தாழ்பாள் போட்டு விட்டு வீட்டிலிருந்த பீரோவின் அருகில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 72 பவுன் நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மறுநாள் காலை எழுந்து பார்த்த மணி பீரோ திறக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  
 
  மேலும், மணி வீட்டின் அருகில் ராம்குமார் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் முன்பகுதியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இவரது வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கழிவறை ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ஒரு அறையில் இருந்த பீரோவை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் பீரோவைத் திறக்க முடியாததால் அந்த பீரோவை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதிக்கு எடுத்துச் சென்று பீரோவை உடைத்துள்ளனர்.  பின்னர் பீரோவில் இருந்த 37 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், பாண்டு பத்திரம் மற்றும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காலையில் எழுந்த ராம்குமார் பின்னால் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசில் மணி, ராம்குமார் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி வெங்கடேசன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப்- இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், சந்துரு ஆகியோர் விசாரணை நடத்தினர்.  மேலும், கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கடலூரிலிருந்து சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சரண்யா ஆகியோர் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.

மோப்பநாய் அர்ஜுன் சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடி அருகிலுள்ள கிராமத்தில் நின்றது. இதுகுறித்து டெல்டா இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.   இரண்டு வீடுகளில் சுமார் 109 பவுன் நகைகள் மற்றும் 7 லட்சத்து 27 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கொள்ளையடிச்சுட்டாங்க...  
இதுகுறித்து விவசாயி மணி கூறுகையில், நானும், என் மனைவியும் விவசாயம் செய்து,  கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு சிறுக, சிறுக சம்பாதித்த நகை, பணத்தை  கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதிலிருந்து நாங்கள் எப்படி  மீள்வோம் என்று தெரியவில்லை. என் மகன் இப்பத்தான் வெளிநாட்டில் இருந்து  வந்தான். என் மகனுக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்த்துக்  கொண்டிருக்கிறோம். இப்போது நடந்துள்ள இந்த சம்பவம் எங்கள் குடும்பத்தில் மிகுந்த  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் எப்படியாவது நகையை மீட்டு தர வேண்டும்  என கண்ணீர் மல்க தலையில் அடித்துக் கொண்டே புலம்பினர்

Tags : jewelery ,robbery ,raids ,house ,row ,Ramanatham ,SP ,
× RELATED பொன்னேரி அருகே நள்ளிரவில் கைவரிசை...