குடோன்களில் அரிசி இருப்பு வைக்க வேண்டும் அதிகாரிகள் உத்தரவு வடகிழக்கு பருவமழை காரணமாக

வேலூர், அக்.20: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையையொட்டி அந்தந்த மாவட்ட குடோன்களில் அரிசி இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவ மழையும் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உணவு கிடைக்கும் வகையில் அந்தந்த மாவட்ட குடோன்கள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ெபாது வினியோகத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் மீட்புத்துறை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவர். அப்போது அவர்களுக்கு உடனடியாக உணவு கிடைக்கும் வகையில் அருகில் ரேஷன்கடைகளில் அரிசி இருப்பு வைக்க வேண்டும் என்று பேரிடர் மீட்புத்துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதன்பேரில் சிவில் சப்ளை குடோன்களிலிருந்து முதற்கட்டமாக வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள், அருகில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி இருப்பு வைக்கப்படும். அதாவது பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியுடன் கூடுதலாக இந்த அரிசியும் தயார் நிலையில் வைக்கப்படும்.

மேலும் தங்க வைக்கப்படும் முகாம்களிலும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரிசி மற்ற பொருட்களுக்கான நிதி பேரிடர் மீட்புத்துறை நிதியிலிருந்து அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான அரிசி குறித்து அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: