ரூ.21 கோடியில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் சாலை சிறு மழைக்கே தாங்கலை

திருப்பரங்குன்றம், அக். 20:  மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு செல்வதற்காக பெங்களூரு - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கூத்தியார்குண்டுவில் இருந்து 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.21 கோடி செலவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமற்று இருப்பதாக இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று முன்தினம் செய்த மழைநீர் இந்த சாலையில் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே  தேங்கியுள்ளது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் சென்று வரும் போது கற்கள் பெயர்ந்து மேலும் பள்ளமாகி தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த இடத்தின் அருகில் நகர பேருந்து நிறுத்தம் உள்ளதால், அதற்கு நிற்கும் பொதுமக்கள் மீது இவ்வழியாக செல்லும் வாகனங்கள் சகதியை வாரி இறைத்து செல்கிறது. ரூ.21 கோடியில் அமைக்கப்பட்ட சாலை ஒரு மாதத்திற்க்குள் சேதமடைந்துள்ளதாகவும், தரமற்ற முறையில் சாலையை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்து தர இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: