×

குடகனாற்றில் முழுமையாக தண்ணீர் திறந்து விடக்கோரி 20 கிராமங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சின்னாளபட்டி, அக். 20: திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளான புல்லாவெளி, தாண்டிக்குடி, பெரும்பாறையில் பெய்யும் மழைநீர் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வந்து மறுகால் பாயும் போது குடகனாற்றில் செல்வது வழக்கமாக இருந்தது. அதன்பின் ராஜவாய்க்கால் கட்டியதும், குடகனாற்றுக்கு வந்த தண்ணீரை அடைத்து விட்டனர். இதனால் மழை பெய்தால் குடகனாற்றுக்கு தண்ணீர் வராமல் இருந்து வந்தது. இதனால் கடும் வறட்சி ஏற்படவே தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதை கலெக்டர் ஏற்று 15 நாட்களுக்கு குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்தார். முன்னதாக திமுக மாநில துணை பொதுச் செயலாளரும், எம்எல்வுமான ஐ.பெரியசாமி தனது சொந்த செலவில் விவசாயிகள் நலன் கருதி குடகனாற்றை தூர்வாரி கொடுத்தார். இதனால் திறந்து விட்டவுடன் தண்ணீர் 15 தூரம் கடந்து அனுமந்தராயன்கோட்டையை வந்தடைந்தது.

பின்னர் தாமரை குளத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போது வேடசந்தூர் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தண்ணீர் குடகனாற்றிலே விடப்பட்டது. தொடர்ந்து பாலம்ராஜக்காபட்டியை தாண்டியவுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் முழுமையாக தண்ணீர் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதை கண்டித்து நேற்று முதல் அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துரை புதுப்பட்டி, மயிலாப்பூர் உள்பட 20 கிராமங்களில் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாசன விவசாயிகள் கூறுகையில், ‘அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வாய்க்கால் என்பதாலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தாலும் குடகனாற்றில் முழுமையாக தண்ணீர் வரவில்லை. அரசால் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழு குடகனாற்று பகுதியை முழுமையாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு முன் சிலரின் தூண்டுதலால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது தண்ணீர் திறந்துவிட்டால்தான் முழுமையாக பயன்கிடைக்கும் காலதாமதமானால் தண்ணீர் வரத்து குறைந்துவிடும்’ என்றனர்.

Tags : Demonstration ,villages ,opening ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்