தேவராயநேரி உபரிநீர் விவகாரம்

திருச்சி, அக்.20: திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த நரிக்குறவர்கள் நேற்று மதியம் 2 மணியளவில் கலெக்டர் சிவராசு காரில் புறப்பட்டு வெளியே வந்தபோது அவரது காரை மறித்து முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நரிக்குறவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் திருநெடுங்களம் பஞ்சாயத்துக்குட்பட்ட தேவராயநேரி கிரமத்தில் நரிகுறவர் காலனியில் 52 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கடந்த 1966ம் ஆண்டு கலெக்டர் மலையப்பா நரிக்குறவர் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தேவராயநேரி மேட்டுப்பகுதி சர்வே எண்: 90/1ல் உள்ள சுமார் 120 ஏக்கர் நிலத்தை, 120 நரிக்குறவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.

எங்களுக்கு வழங்கிய நிலத்துக்கு ஆற்றுப்பாசனமோ, குளத்துப்பாசனமோ கிடையாது. பொய்கைக்குடி, அசூர், தஞ்சை மாவட்டம் புதுக்குடி ஆகிய கிராமங்களிலிருந்து வரும் உபரி நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம். தற்போது ஆயிரம் தலைக்கட்டுகள் உள்ளோம். இருக்கும் நிலத்தை பிரித்து விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் தேவராயநேரி கிராம மக்கள் கடந்த 15ம் தேதி கடப்பாரை, மண்வெட்டியுடன் வந்து எங்களுக்கு வரும் உபரி நீரை தேவராயநேரி குளத்துக்கு திருப்பி விட்டுள்ளனர். எனவே நேரில் வந்து ஆய்வு செய்து எங்களுக்கு உரிய நீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்வதாக கலெக்டர் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: