×

கி.பி.1761ம் ஆண்டு

நீடாமங்கலம், அக்.20: கி.பி.1761ம் ஆண்டு பிரதாபசிம்மன் மன்னர் கட்டிய கோயில் தேர் பாதுகாக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழராஜ வீதியில் அமைந்துள்ளது சந்தானராமசுவாமி கோயில். இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன்-யமுனாம்பாள் தம்பதியருக்கு குழந்தை பாக்யம் அருளிய மகத்துவம் பெற்றது. இதனால் கி.பி.1761ம் ஆண்டு சந்தான ராமசுவாமிக்கு, பிரதாபசிம்மன் மன்னர் அப்போது மிகப்பெரிய கோயிலை கட்டினார். இக்கோயில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதரால் பாடல் பெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு இப்பகுதி மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி வந்து செல்கின்றனர்.

இதுபோல வருவோர், கோயில் எதிரே உள்ள குளத்தில் நீராடி தந்தான கோபால ஜெபம் செய்து, கோயிலில் உள்ள சீதாதேவி, லெட்சுமணன், அனுமன் ஆகியோரை வழிபட்ட நிலையில் சந்தானராமரை வழிபடுகின்றனர். அத்துடன் கோயிலை 12 முறை சுற்றி வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நீராடும் குளமும் தற்போது மாசடைந்து நீராட முடியாத நிலையில் அசுத்த நீராக உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான தேர் உள்ளது. கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும் நிலையில் தேரோட்டமும் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தேரோட்டமும் நடத்தப்பட வில்லை.

இதன்படி 58 ஆண்டுகளாக இக்கோயிலில் தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள்,பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் உதவியுடன் சந்தானராமசுவாமி கோயில் தேருக்கு புதிதாக 4 சக்கரங்கள் பொருத்தும் பணிகளை அறநிலையத்தூற அதிகாரிகள் மேற்கொண்டனர். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டு தேரோட்டம் தற்போது வரை நடைபெறாமல் போனது. இந்த கோயில் தேரில் ராமாயண வரலாற்று சிற்பங்கள் மிகவும் அழகாக செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேரோட்டம் நடைபெறும் கோயில்களில் தேர் இரும்பு தகரங்கள் உதவியுடன் மூடப்பட்டிருக்கும், சில கோயில்களில் தேர் நிறுத்துவதற்கென்று தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது போன்ற எந்த வசதியும் இந்த கோயில் தேருக்கு இல்லை. இதனால் சிற்பங்கள் சேதம் அடையும் வகையில் தேர், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வருகிறது. இந்த கோயில் தேரோட்டம் இப்பகுதியில் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக இருந்துள்ளது. அதுபோலவே தேரை சீரமைத்து மீண்டும் தேரோட்டம் நடைபெற அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ