×

பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவு : அனைத்து அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளிலும்

வேலூர், அக்.18:அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டு வழங்கிய இலவச புத்தகங்களை திரும்ப பெற்று பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள், காலணி, சீருடைகள், ஜியாமெட்ரிக் பாக்ஸ், புத்தகப்பை என வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-19ம் கல்வி ஆண்டே பள்ளி மாணவ, மாணவிகளிடம் பழைய பாடப்புத்தகங்களை பெற்று இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு சரியான முறையில் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2019-20ம் கல்வி ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில் மாணவர்கள் புதிய புத்தகங்கள் பெறுவதற்காக பள்ளிகளுக்கு வரும்போது, அவர்களிடம் இருந்து பழைய பாடப்புத்தகங்கள் அனைத்தையும் பெற்று வகுப்பு மற்றும் பாடவாரியாக தொகுத்து பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் பயன்படுத்த முடியாத புத்தகங்களை பெற்று இருப்பு வைக்க வேண்டும். அத்துடன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கப்படுவதுடன், அதனை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து அரசு, அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Government ,Schools ,Primary Education Officers ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...