தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு முடிவு விவரம் அனுப்ப உத்தரவு

சேலம், அக். 18: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் மற்றும் விவரங்களை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டன. இதில், தமிழகத்தை சேர்ந்த 99,610 தேர்வெழுதிய நிலையில், 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 57.44 ஆக உள்ளது. இதனிடையே அரசுப்பள்ளிகளில் படித்த ஏராளமான மாணவர்களும் நடப்பாண்டு நீட் தேர்வை எழுதியுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட சதவீத்தினர், தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த விவரங்களை உடனடியாக அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தனியாக நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, தொடர் வகுப்புகள் நடத்தப்படவில்லை. அதேசமயம், நேற்று முன்தினம்  வெளியான நீட் தேர்வு முடிவில், அரசுப்பள்ளிகளில் படித்தவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், நடப்பாண்டு அரசுப்பள்ளிகளில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர், அதில் தேர்வெழுதியவர்கள் யார், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை, அவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் விவரம், மற்ற மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்த விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் முடிவில், அரசுப்பள்ளில் இருந்து நடப்பாண்டு தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவோரின் எண்ணிக்கை தெரியவரும். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தகவல் பெறப்பட்டு, அடுத்த ஓரிரு நாளில் முழு விவரங்களை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.  

Related Stories:

>