×

திருவாரூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளர் விரோத போக்கு கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.18: திருவாரூர் அருகே வெள்ளக்குடியில் தனியார் சோப்பு கம்பெனிக்கு சொந்தமான சிலிகேட் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், இவர்களில் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வரும் 90 சதவீத தொழிலாளர்கள் அனைவரும் பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுவனத்திற்கு மூலப்பொருட்கள் லாரியிலிருந்து இறக்கப்படுவதற்கும், ஏற்றப்படுவதற்கு மட்டுமே இங்குள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் குறைந்த அளவில் 25 பேர் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் லாரியில் கொண்டு வரப்படும் மூலப்பொருட்கள் ஏற்கனவே 50 கிலோ எடையில் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது இங்குள்ள தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் ஆயிரம் கிலோ எடை கொண்ட மூட்டையாக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், நிறுவனத்தின் உள்ளே உற்பத்தி பிரிவில் பணியாற்றுவதற்கு திருவாரூர் மாவட்ட தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க கோரி நேற்று இந்த நிறுவனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காந்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த தனியார் நிறுவன தொழிற்சங்க தலைவர் ரமேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் கதிர்வேல், பரசுராமன் உட்பட பலர் உள்ளனர்.

Tags : Demonstration ,Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...