×

லஞ்சம் கொடுக்காததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், அக்.18: பல்லடத்தில் லஞ்சம் கொடுக்காததால் குடிநீர் இணைப்பை துண்டித்த நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து, திருப்பூர் பல்லடம் அடுத்த சேடபாளையம் பகுதியை சேர்ந்த வேலுசாமி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் சேடபாளையத்தில் விவசாயம் செய்து வருகிறேன். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறேன். என் வீட்டிற்கு பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சமாக கொடுத்து 2 இணைப்பு பெற்றுள்ளேன். இருப்பினும், மேற்படி இரண்டு குடிநீர் இணைப்புகள் மூலம் போதிய குடிநீர் கிடைக்கவில்லை.

இதையடுத்து, நகராட்சி ஊழியர்களின் அறிவுறுத்தலின் பேரில் எனது இடத்தில் ஒரு தொட்டி அமைத்து லாரி தண்ணீர் விட்டு உபயோகப்படுத்தி வந்தேன். இது குறித்து விபரம் தெரிந்த நகராட்சி ஆணையாளர் மற்றும் ஊழியர்கள் மேலும் ரூ.2 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் குடிநீர் இணைப்பை தண்ணீர் தொட்டியுடன் இணைத்து விடுகிறோம் என கூறி இணைப்பு கொடுத்து விட்டு சென்றனர். ஆனால், அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாததால் நான் பணம் தரவில்லை. இந்நிலையில், கடந்த 15ம் தேதி பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் ஒரு சில அதிகாரிகள் குடிநீர் இணைப்புகளை துண்டித்து விட்டு சட்டவிரோதமாக தண்ணீரை பயன்படுத்துகிறாய் என கூறி போலீசில் பொய் புகார் கொடுத்தனர்.

லஞ்சம் கொடுக்காததால் அத்துமீறி குழாய் இணைப்புகளை துண்டித்த நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் காவல் நிைலயத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கணேசன் கூறுகையில்,`வேலுச்சாமி வீட்டு பயன்பாட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற்று முறையில்லாமல் தண்ணீரை சேமித்து அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு பயன்படுத்தி வருகிறார். இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதாக ஏற்கனவே என்னிடம் மனு கொடுத்துள்ளனர். அதன்பேரில், நடவடிக்கை எடுத்து இணைப்பை துண்டித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு