×

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது

சென்னை, அக்.16: நுங்கம்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று அசுர வேகத்தில் தாறுமாறாக ஓடியது. இதனால், இதர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.  மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் சென்ற அந்த காரை, சில வாகன ஓட்டிகள் விரட்டி சென்று வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே மடக்கினர். அப்போது காரை ஓட்டிய இளம்பெண், மதுபோதையில் நிற்க முடியாமல் உலறினார். தகவலறிந்த வடபழனி போலீசார் விரைந்து வந்து, போதையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். அதைதொடர்ந்து கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த ஆஷா வனிதா (30) என்றும், இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டு பின்னர் காரில் வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அதிவேமாக வாகனம் ஓட்டியது, பொதுமக்களை அச்சுறுத்தியது, மது போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இளம்பெண்ணை போலீசார் கடுமையாக எச்சரித்து எழுதிவாங்கி கொண்டு சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கோட்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கோடம்பாக்கம் யூஐ காலனியை சேர்ந்த ஜெயரோசா (46), வடபழனி காவல் நிலையத்தில், நான் ஆற்காடு சாலையில் காரில் வந்தபோது, ஆஷா வனிதா அச்சுறுத்தும் விதமாக காரை ஓட்டியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kodambakkam Arcot Road ,teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை