×

கணவருடன் சேர்த்து வைக்க கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் தர்ணா போராட்டம்

செங்கல்பட்டு, அக். 16: மறைமலைநகர் அடுத்த  சிங்கபெருமாள் கோயில் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (30). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும்  சென்னை கொளத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி (28) என்பவருக்கும், கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது, விஜயலட்சுமியின் பெற்றோர், 50 சவரன் நகை மற்றும சீர் வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர். திருமணம் ஆனநாள் முதல், வரதராஜனின் தாய் ஜெயந்தி, விஜயலட்சுமியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், வரதராஜன், விஜயலட்சுமி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் விஜயலட்சுமி, தனது கணவரை பிரிந்து சென்னை கொளத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர், மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த அவர், மாமியாரிடம்  தன்னை கணவருடன் சேர்த்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதனை, மாமியார் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வரதராஜனுக்கு, வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த விஜயலட்சுமி, நேற்று முன்தினம் இரவு, மறைமலைநகர் போலீசில் புகார் அளித்தார்.

ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கணவர் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் முன் அமர்ந்து, தன்னை கணவனுடன் சேர்த்து வைக்கும்படி கூறி, போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாமியார் ஜெயந்தி, அவரது சகோதரி, வரதராஜனின் தாய்மாமன் ஆகியோர் அவரை அடித்து உதைத்துள்ளனர். ஆனாலும், அவர் தர்ணாவில் ஈடுபட்டதால், வீட்டை பூட்டி கொண்டு அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். விடிய விடிய அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமி, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார், அவரது புகாரை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர், காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைதொடர்ந்து நேற்று மாலை, இன்ஸ்பெக்டர் அமுதா, விஜயலட்சுமியிடம் விசாரித்தார். அப்போது, கணவருடன் சேர்த்து வைக்கும்படி போராட்டம் நடத்தியதால், அவரது உறவினர்கள் என்னை வெளியே தள்ளி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு பெண்ணுடன் தனது கணவருக்கு நடக்க உள்ள திருமணத்தை நிறுத்த வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tarna ,All Women Police Station ,
× RELATED 17 வயது சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர்