×

லாரியில் கடத்திய ரூ.8 லட்சம் எரிசாராயம் பறிமுதல் 2 ேபர் கைது திண்டிவனத்தில் இருந்து அவலூர்பேட்டைக்கு

வந்தவாசி, அக்.16: திண்டிவனத்தில் இருந்து அவலூர்பேட்டைக்கு லாரியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கெங்கம்பூண்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலம் அருகே, நேற்று லாரி ஒன்று நீண்டநேரமாக நின்று கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் டிஎஸ்பி தங்கராமனுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், டிஎஸ்பி, தேசூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நசுருதீன், தணிகைவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டதும், லாரி அருகே நின்று கொண்டிருந்த 3 பேர் தப்பியோடினர். அதில் 2 பேரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் அவலூர்பேட்டையை சேர்ந்த அண்ணாமலை(40), கீழ்பென்னாத்தூர் அடுத்த எருகம்பூண்டியைச்சேர்ந்த பிரவீன்குமார்(19) என்பதும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மேல்ஒலக்கூர் பகுதியில் இருந்து அவலூர்பேட்டைக்கு லாரியில் எரிசாராயம் கடத்திச் சென்றதும், லாரியை நிறுத்தி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 கேன்களில் இருந்த எரிசாராயம், லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து அண்ணாமலை, பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான கெங்கம்பூண்டி சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த எரிசாராயத்தின் மதிப்பு ₹8 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Tindivanam ,Avalurpet ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...